தலைஞாயிறு பகுதியில் தென்னங்கன்றுகளை தாக்கும் காண்டாமிருக வண்டுகள் விவசாயிகள் கவலை


தலைஞாயிறு பகுதியில் தென்னங்கன்றுகளை தாக்கும் காண்டாமிருக வண்டுகள் விவசாயிகள் கவலை
x

தலைஞாயிறு பகுதியில் தென்னங்கன்றுகளை காண்டாமிருக வண்டுகள் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வானவன்மகாதேவி, நாலுவேதபதி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, தாணிக்கோட்டகம், வெள்ளிகிடங்கு, அண்ணாபேட்டை, வண்டுவாஞ்சேரி உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலினால் பல ஆயிரம் தென்னை மரங்கள் அடியோடு முறிந்து நாசமாயின. அதன் பிறகு தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத்துறையினரால் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டு விவசாயிகள் நிலங்களில் நட்டு பராமரித்து வந்தனர். மேலும் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் வெளிமாநிலங்களில் இருந்து நெட்டை, குட்டை, குட்டை நெட்டை உள்ளிட்ட தென்னை மரக்கன்றுகளை ரூ.250 முதல் ரூ.1000 வரை செலவு செய்து நிலங்களில் நட்டு பராமரித்து வந்தனர்.

காண்டாமிருக வண்டுகள்

இந்த தென்னை மரக்கன்றுகளில் தற்போது காண்டாமிருக வண்டுகளின் தாக்கம் அதிகரித்து உள்ளது. தென்னங்கன்றுகளின் குருத்துக்களை துளைத்து ஊடுருவும் காண்டா மிருக வண்டுகள் தென்னை மரத்தை அடியோடு அழித்து விடுகின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள தென்னை மர விவசாயிகள் நாப்தலின் உருண்டை, ஆமணக்கு புண்ணாக்கு, இனக்கவர்ச்சி பொறி, குருணை மருந்து உள்ளிட்டவற்றை பயன்படுத்தியும் காண்டாமிருக வண்டுகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முயற்சி விவசாயிகளுக்கு பலன் அளிக்கவில்லை.

வலைகள்

மேலும் தென்னை மரக்கன்றுகளை பாதுகாக்க தென்னங்கன்றுகள் முழுவதும் வலைகளால் சுற்றி பாதுகாக்க ஒவ்வொரு தென்னங்கன்றுக்கும் ரூ.200 முதலீடு செய்ய வேண்டி உள்ளது. ஒரு விவசாயி நூற்றுக்கணக்கான தென்னங்கன்றுகளை நட்டு பராமரிக்கும்போது ஒவ்வொரு கன்றுக்கும் ரூ.200 முதலீடு செய்வது கடினமாக உள்ளது. எனவே வேளாண்மை துறையினர் தலைஞாயிறு, துளசியாப்பட்டினம், வண்டுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story