கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2020 2:14 AM GMT (Updated: 20 Sep 2020 2:14 AM GMT)

நாகை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டசேரி,

நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய தலைவர் சிங்க.ஸ்டாலின்பாபு, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சுபாஷ் சந்திரபோஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில், கொரோனா நிவாரணமாக ரூ.7,500 வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும். நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. கொரோனா முடியும் வரை உணவு பொருட்களை ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்கான கடன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

வேதாரண்யம்

இதேபோல் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டிற்கான பயிர்காப்பீடு செலுத்தியவர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தை கூட்டாமல் அவசர சட்டம் மூலம் திட்டங்களை நிறைவேற்றுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் வைத்திலிங்கம், ரேவதி பாலகுரு, மாவட்டக்குழு உறுப்பினர் வீரப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா நிவாரணமாக ரூ.7,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருமருகலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பாபுஜீ தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி, ஒன்றிய பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Next Story