சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் வெடி விபத்து


சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் வெடி விபத்து
x
தினத்தந்தி 20 Sep 2020 9:00 AM GMT (Updated: 20 Sep 2020 8:53 AM GMT)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி பகுதியை சேர்ந்த சஞ்சய்பிரதீப் (வயது 32) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அதே பகுதியில் உள்ளது. இந்த பட்டாசு ஆலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனுமதி வழங்கி உள்ளார். அதனால் 20-க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்டுதான் பட்டாசு தயாரிக்க வேண்டும்.

ஆனால் அதிக அளவில் ஆட்களை கொண்டு நேற்று காலை பட்டாசுகளை தயாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆலையில் காலி இடங்களிலும் தொழிலாளர்கள் அமர்ந்து பட்டாசுகளை உற்பத்தி செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சோர்சா வகை பட்டாசுகளை ஒரு வண்டியில் எடுத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடிக்க தொடங்கின. உடனே தொழிலாளர்கள் ஆலையில் இருந்து வெளியேறியதால் வெடி விபத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் சுமார் 1 மணிநேரத்துக்கு மேலாக வெடித்துக்கொண்டே இருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகள் ஆய்வு தனி தாசில்தார் லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்வின் போது பட்டாசு ஆலையில் இருந்த காலி இடங்களில் செட் அமைத்து பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் ஆலைக்குள் இருசக்கர வாகனங்களை கொண்டு சென்று நிறுத்தி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு விதிமீறல்கள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை குறித்து தனி தாசில்தார் லோகநாதன் கூறியதாவது:-

வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் பல்வேறு விதிமீறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 5 முறைக்கு மேல் இந்த பட்டாசு ஆலையில் விதிமீறல் காரணங்களுக்காக தற்காலிகமாக உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பட்டாசு ஆலைகளில் தற்போது பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வரும் நிலையில் அரசு விதித்துள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விதிகளை பின்பற்றாத ஆலைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story