ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி தெருவைச் சேர்ந்தவர்கள் மோகன்ராஜ்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இரண்டாவதாக கர்ப்பம் தரித்த காளீஸ்வரி பிரசவத்திற்காக நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பிரசவத்தை தொடர்ந்து தாயின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் காளீஸ்வரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக காளீஸ்வரியின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டது.
மோகன்ராஜ்- காளீஸ்வரி தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவு பெறாததால் கோட்டாட்சியர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற வேண்டும் என்றும், எனவே ஒரு நாள் கழித்துதான் காளீஸ்வரியின் உடல் கிடைக்கும் என உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள காளீஸ்வரியின் உறவினர்கள் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சர்ச் பாயிண்ட் என்ற நான்கு முக்கு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு சமாதானம் செய்தனர். ஆனால் அதனை ஏற்காத காளீஸ்வரியின் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த திடீர் போராட்டத்தால் நான்கு திசைகளிலும் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் சுமார் அரை மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story