பிரதம மந்திரி ஊக்க நிதி திட்டத்தில், போலியாக சேர்க்கப்பட்ட 42,655 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் - கலெக்டர் தகவல்


பிரதம மந்திரி ஊக்க நிதி திட்டத்தில், போலியாக சேர்க்கப்பட்ட 42,655 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Sep 2020 12:00 PM GMT (Updated: 20 Sep 2020 12:03 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி ஊக்க நிதி திட்டத்தில் போலியாக சேர்க்கப்பட்ட 42 ஆயிரத்து 655 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசின் மூலம் 41 திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட வில்லை. இதில் பிரதமரின் வீடு வழங்கும், கழிவறை கட்டும் திட்டம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி ஊக்க நிதி திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது.

பிரதம மந்திரி ஊக்க நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியானது 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் போலியாக சிலர் சேர்க்கப்பட்டு பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கான கள அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்யாமல் போலியாக சேர்த்தவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் எப்படி பணம் செலுத்தப்பட்டது என்றும் இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்றும் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டத்தில் எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, டாக்டர் விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.சேகரன், மு.பெ.கிரி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பதில் அளித்து கூறியதாவது:-

இந்த திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகிறார்கள். இதில் கொரோனா காலத்தை பயன்படுத்தி 42 ஆயிரத்து 655 பேர் போலியாக சேர்க்கப்பட்டு உள்ளனர். தற்போது அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டன.

மேலும் அவர்களிடம் வங்கி கணக்கில் இருந்து இந்த திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட பணம் திரும்ப பெறப்பட்டு வருகிறது. இதில் 29 பேரின் வங்கி கணக்கில் பணம் இல்லாதவர்களிடம் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வருவாய் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி பணத்தை திரும்பப் பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் விவசாயிகள் சேர்ப்பதற்கு கொடுக்கப்பட்ட ரகசிய பாஸ்வேர்டு தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி யார், யாரையெல்லாம் இதில் இணைத்தார்கள் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசிலும் புகார் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story