நெல்லிக்குப்பம் அருகே, கார்களை விற்று தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.12¼ லட்சம் மோசடி - வியாபாரி கைது


நெல்லிக்குப்பம் அருகே, கார்களை விற்று தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.12¼ லட்சம் மோசடி - வியாபாரி கைது
x
தினத்தந்தி 20 Sep 2020 3:00 PM GMT (Updated: 20 Sep 2020 2:56 PM GMT)

நெல்லிக்குப்பம் அருகே 9 கார்களை விற்று தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.12¼ லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். மற் றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர், 

நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கம் பரகத்தெருவை சேர்ந்தவர் முகமது பாருக் (வயது 46). இவர் சம்பவத்தன்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் மனு அளித்தார். அதில், தான் 18 ஆண்டுகள் குவைத் நாட்டில் டிரைவராக வேலை செய்து விட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டேன்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மேல்பட்டாம்பாக்கம் பெருமாள்தெருவை சேர்ந்த அஷ்ரப் அலி மகன் வெங்காய வியாபாரியான முகமது ஆஷிக் (31) என்பவர் என்னை சந்தித்து, தானும், புதுச்சேரி சண்முகாபுரம் சோனியா காந்தி நகரை சேர்ந்த தண்டபாணி மகன் அருண்பிரசாத் என்பவரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறோம். அதில் நல்ல லாபம் கிடைக்கிறது. நீயும் இதில் முதலீடு செய்தால், உனக்கு 50 சதவீதம் லாபம் கொடுப்பதாக கூறினர்.

இதை நம்பிய நான் ரூ.12 லட்சத்து 22 ஆயிரம் முதலீடு செய்தேன். அதன் மூலம் முகமது ஆஷிக் எனக்கு 9 பழைய கார்களை வாங்கி என்னுடைய வீட்டில் விட்டார். பின்னர் முகமது ஆஷிக், அருண்பிரசாத் ஆகிய 2 பேரும் கார்களை புதுச்சேரியில் வைத்து விற்றால் அதிக விலைக்கு விற்கலாம் என்று கூறி, அந்த 9 கார்களையும் புதுச்சேரி எடுத்துச்சென்று விற்றனர். ஆனால் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்து விட்டனர். இதனால் நான் முதலீடு செய்த ரூ.12 லட்சத்து 22 ஆயிரத்தை கேட்டேன். அதற்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என்று புகார் தெரிவித்தார். இதை பெற்ற அவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேசன் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி(பொறுப்பு), சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 2 பேரும் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதை யடுத்து முகமது ஆஷிக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருண்பிரசாத்தை தேடி வருகின்றனர்.

Next Story