சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு: மண் பரிசோதனையை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம் - புதுச்சத்திரம் அருகே பரபரப்பு


சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு: மண் பரிசோதனையை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம் - புதுச்சத்திரம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 20 Sep 2020 3:15 PM GMT (Updated: 20 Sep 2020 3:02 PM GMT)

புதுச்சத்திரம் அருகே சாயப்பட்டறை அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்யும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புவனகிரி,

புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கோபாலபுரம் தச்சம்பாளையம் பகுதியில் சாயப்பட்டறை அமைக்க 1000 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. இந்த சாயப்பட்டறைக்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சாயப்பட்டறையில் குடிநீருக்காக மண் பரிசோதனை செய்யும் பணி நேற்று முன்தினம் மாலை நடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து, அந்த பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீசார் விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தி கிராம மக்களை அனுப்பி வைத்தனர். மேலும் மண் பரிசோதனை செய்வதற்காக வைத்திருந்த குழாய்களையும் போலீசார் கைப்பற்றி, போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

இந்த நிலையில் கிராம மக்கள் நேற்று காலையிலும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த வந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார், சாயப்பட்டறை அமைக்கும் பணி நடக்காது, அதற்கு நாங்கள் முழு பொறுப்பேற்றுக்கொள்கிறோம். நீங்கள் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்றனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story