குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முதுமலை வனத்தில் வளர்ப்பு யானைகளில் வனத்துறையினர் ரோந்து
முதுமலை வனப்பகுதியில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வளர்ப்பு யானைகளில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலூர்,
முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு காட்டு யானை, மான், புலி, காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடிகள் செந்நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதேபோல் காப்பகத்தின் கரையோரம் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும், கேரளாவின் முத்தங்கா சரணாலயமும் உள்ளது. 3 மாநிலங்கள் இணையும் இடத்தில் அடர்ந்த வனம் உள்ளதால் வேட்டை கும்பல்கள் அடிக்கடி தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இதனை கண்காணிக்க முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதுதவிர முதுமலையில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை கொண்டு வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது மேலும் மாநிலங்களுக்கிடையே பொதுப் போக்குவரத்து நடைபெற வில்லை. இதனால் பொதுமக்கள் வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கவும், வேட்டை கும்பல்கள் வனத்துக்குள் ஊடுருவதை தடுக்கவும் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேபோல் புலிகள் காப்பக பகுதியில் முதுமலை ஊராட்சி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் வாழை, நெல் உள்ளிட்ட விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காட்டு யானைகள் ஊராட்சி பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகிறது.
தொடர்ந்து மனித-வனவிலங்கு மோதலும் நடைபெற்று வருகிறது. இதனால் காட்டு யானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து வளர்ப்பு யானைகளைக் கொண்டு வனத்துறையினர் ஊராட்சி பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- வளர்ப்பு யானைகளுடன் வனத்துக்குள் ரோந்து பணி மேற்கொள்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஊராட்சி பகுதிக்குள் காட்டு யானைகள் நுழையாமல் இருக்க 2 கும்கி யானைகள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதுமலை பொதுமக்கள் கூறுகையில், முதுகுளியில் இருந்து நம்பிக்குன்னு இடையே உள்ள அகழி ஆழப்படுத்தப்படாமல் மண் மூடிக் கிடக்கிறது. இதனால் காட்டு யானைகள் எளிதாக ஊருக்குள் வந்து விடுகிறது. இவ்வாறு தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே அகழியை ஆழப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story