தட்டார்மடத்தில் வியாபாரி கடத்திக்கொலை: உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் தொடர் போராட்டம் - இன்ஸ்பெக்டர், அ.தி.மு.க. நிர்வாகியை உடனே கைது செய்ய வலியுறுத்தல்


தட்டார்மடத்தில் வியாபாரி கடத்திக்கொலை: உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் தொடர் போராட்டம் - இன்ஸ்பெக்டர், அ.தி.மு.க. நிர்வாகியை உடனே கைது செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Sept 2020 5:15 AM IST (Updated: 21 Sept 2020 12:38 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடத்தில் கடத்திக் கொலை செய்யப்பட்ட வியாபாரியின் உடலை வாங்க மறுத்து, பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர், அ.தி.மு.க. நிர்வாகியை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தட்டார்மடம்,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17-ந்தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதில் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். செல்வனின் உடலை நீதிபதி முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். செல்வனின் மனைவிக்கு நிவாரண உதவி, அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செல்வனின் உடலை வாங்க மறுத்து, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் நேற்று 3-வது நாளாக சொக்கன்குடியிருப்பில் செல்வனின் வீட்டின் அருகில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாம் தமிழர் கட்சியினர், பனங்காட்டுப்படை கட்சியினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, சாத்தான்குளம் தாசில்தார் ராஜலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கிளாட்வின் (சாத்தான்குளம்), பாரத் (திருச்செந்தூர்), பிரகாஷ் (வள்ளியூர்) மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது செல்வனின் குடும்பத்தினர் கூறுகையில், செல்வன் கொலையில் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும். எங்களிடம் அனுமதி பெறாமல், செல்வனின் உடலை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். நீதிபதி முன்னிலையில், செல்வனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story