மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: அடவிநயினார் அணை மீண்டும் நிரம்பியது


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: அடவிநயினார் அணை மீண்டும் நிரம்பியது
x
தினத்தந்தி 21 Sept 2020 4:15 AM IST (Updated: 21 Sept 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அடவிநயினார் அணை மீண்டும் நிரம்பியது.

அச்சன்புதூர்,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நேற்று காலையில் நிரம்பி வழிந்தது. அணைக்கு வரும் 86 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதன் மூலம் வடகரை, கரிசல்குடியிருப்பு, பண்பொழி, இலத்தூர், ஆய்க்குடி, சாம்பவர்வடகரை, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் பாசன வசதி பெறுகிறது. அணை நிரம்பியதால், ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டது.

அடவிநயினார் அணை கடந்த மாதமும் ஏற்கனவே நிரம்பி வழிந்தது. அப்போது பருவம் தவறி பெய்த மழையால், விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கவில்லை.

தற்போது 2-வது முறையாக அடவிநயினார் அணை நிரம்பிய நிலையில், விவசாய பணிகளை தொடங்கிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடையம் அருகே உள்ள ராமநதி அணையில் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் அணைக்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால், அணைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டிருந்தாலும் அதன் பக்கவட்டுவழியாக உள்ளே சென்று அணைக்கு வரும் தண்ணீர் பகுதியில் சென்று குளித்து வருகின்றனர்.

மேலும் விலங்குகளிடம் இருந்தும் அணையின் பாதுகாப்பு தன்மையை கருதியும் பொதுப்பணித்துறையில் பொதுமக்கள் நலன் கருதி அணையின் நுழைவு வாயிலில் எச்சரிக்கையுடன் கூடிய தடுப்பு பலகை வைத்துள்ளனர். இதனால் தற்போது பொதுமக்கள் அணைப்பகுதிக்கு சென்று குளிக்க முடியாது. மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய பொதுமக்களுக்கு சென்றுவர பொதுப்பணித்துறையினர் உதவிசெய்து வருகின்றனர்.

Next Story