மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 214 மி.மீ மழை பதிவு வரலாறு காணாத கனமழையால் உடுப்பி வெள்ளத்தில் மிதக்கிறது - படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரம் + "||" + Due to unprecedented heavy rain Udupi floods By boats The task of rescuing people

ஒரே நாளில் 214 மி.மீ மழை பதிவு வரலாறு காணாத கனமழையால் உடுப்பி வெள்ளத்தில் மிதக்கிறது - படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரம்

ஒரே நாளில் 214 மி.மீ மழை பதிவு வரலாறு காணாத கனமழையால் உடுப்பி வெள்ளத்தில் மிதக்கிறது - படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரம்
உடுப்பி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு ஒரே நாளில் 214 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
மங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. ஆனால் கடந்த மாதம் (ஆகஸ்டு) மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன்காரணமாக பெங்களூரு, மங்களூரு, உடுப்பி, மைசூரு, குடகு உள்ளிட்ட தென்கர்நாடக மாவட்டங்களிலும், பெலகாவி, தார்வார், கதக், யாதகிரி, கலபுரகி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த தொடர் கனமழையால் மாநிலத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.


அதாவது கர்நாடகத்தில் 23 மாவட்டங்களில் 130 தாலுகாக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக மாநில அரசு அறிவித்தது. மேலும், மாநிலத்தில் மழை வெள்ளத்தால் 10 ஆயிரம் வீடுகள், 14 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்தன. இதனால் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்து இருந்தது. இதுதொடர்பான அறிக்கையை மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவிடம் மாநில அரசு வழங்கியது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கர்நாடகத்தில் பெரிய அளவில் மழை பெய்யாமல் இருந்து வந்தது. மாநிலத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்த நிலையில், கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 2-வது அலையை தொடங்கி உள்ளது.

அதாவது, கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் பெங்களூரு, மங்களூரு, உடுப்பி, குடகு, உத்தரகன்னடா, பெலகாவி, ராய்ச்சூர், விஜயாப்புரா, பல்லாரி, கலபுரகி, யாதகிரி, கதக் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. உடுப்பி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் உடுப்பி மாவட்டமே மழை வெள்ளத்தில் மிதக்கிறது.

அதாவது, தொடர் கனமழையால் உடுப்பு டவுனையொட்டி உள்ள பாஜே ஏரி முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பி உள்ளது. 10.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏரி நிரம்பி வழிவதால், உடுப்பி டவுன் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தண்ணீர் புகுந்தது.

உடுப்பியில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு பெய்ய தொடங்கிய கனமழை நேற்று மாலை வரை இடைவிடாமல் கொட்டியது. விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையாலும், பாஜே ஏரியில் வெளியேற்றப்பட்ட தண்ணீராலும் உடுப்பியில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. உடுப்பி டவுனில் பன்னஜ்ஜே, உதயாவர், குந்திபயல், கல்சங்கா உள்ளிட்ட பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு 5 அடி உயரம் வரை மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

உடுப்பி டவுனில் ஏராளமான சாலைகள் மற்றும் வீடுகளில் நின்ற கார்கள், மோட்டார் சைக்கிள்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. வயதானவர்கள், குழந்தைகள் இந்த மழை வெள்ளத்தால் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

இதையடுத்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து உடுப்பியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ரப்பர் படகு மற்றும் மரப்படகில் சென்று வெள்ளத்தில் சிக்கிய 350-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். இதனால் உடுப்பியில் பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உடுப்பி கிருஷ்ண மடத்தின் கார் நிறுத்தும் இடத்திலும் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தண்ணீரில் மூழ்கின. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உடுப்பி டவுனில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வரலாறு காணாத வகையில் உடுப்பியில் அதிகளவு மழை பதிவாகி உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இதுபோன்ற பேய் மழையை நாங்கள் பார்த்ததில்லை என்று உடுப்பி டவுனை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

உடுப்பி டவுன் மட்டுமின்றி மாவட்டத்தில் குந்தாப்புரா, கார்கலா, ஹெப்ரி, காபு, பைந்தூர் உள்ளிட்ட தாலுகாக்களிலும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏராளமான பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதனால் அங்குள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காபு தாலுகாவில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் நாய் ஆகியவை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் உடுப்பியில் 214 மி.மீ. மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அரபிக்கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மல்பே மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அரபிக்கடல் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று கடலோர காவல்படையினர் எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

இதேபோல தட்சிண கன்னடா, உத்தரகன்னடா மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. அங்கும் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த மாவட்டங்களிலும் இருந்தும் அரபிக்கடலுக்கு யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதேபோல, மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மடிகேரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை தாலுகாக்களில் கனமழை இடைவிடாமல் கொட்டி வருகிறது. மடிகேரி தாலுகா பாகமண்டலா பகுதியில் கொட்டி வரும் கனமழையால், அந்தப்பகுதியே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மூழ்கின. இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கிய மக்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு நிவாரண முகாமிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். மேலும், சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.

வடகர்நாடக மாவட்டத்தை பொறுத்தவரை, கலபுரகி, பெலகாவி, யாதகிரி, ராய்ச்சூர் ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கலபுரகயில் உள்ள உஜ்ஜய்னி அணை உள்ளிட்ட சில அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக அங்குள்ள பீமா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

இதன்காரணமாக அப்சல்புரா, ஜேவர்கி, சித்தாப்புரா, சாகாபாத் உள்ளிட்ட தாலுகாக்களில் பீமா ஆற்றின் கரையோரத்தில் உள்ள 32 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து கொண்டது. அந்தப்பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அத்துடன் அப்சல்புரா அருகே பீமான ஆற்றின் குறுக்கே உள்ள கத்தரகி பாலத்தை தொட்டப்படி தண்ணீர் சென்றது. மேலும் அங்குள்ள ஒரு கோவிலையும் தண்ணீர் சூழ்ந்துகொண்டது.

மேலும் தலைநகர் பெங்களூருவை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. மல்லேசுவரம், யஸ்வந்தபுரம், ஸ்ரீராமபுரம், ஜெயநகர், சாம்ராஜ்பேட்டை, சாந்தி, நகர், மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், பசவனகுடி, மைசூரு, ரோடு, ராஜாஜிநகர், கெங்கேரி, ராஜராஜேஸ்வரி நகர், ஜாலஹள்ளி கிராஸ், விஜயாநகர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. மேலும், 3 நாட்களுக்கு பெங்களூருவில் கனமழை நீடிக்கும் என்பதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி நிர்வாக அதிகாரி கவுரவ் குப்தாவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முதல்-மந்திரி எடியூரப்பா, உடுப்பி மாவட்ட கலெக்டர் ஜெகதீசை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். மேலும் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தும்படியும் அவருக்கு எடியூரப்பா உத்தரவிட்டார்.

கர்நாடகத்தில் ஏற்கனவே கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கி உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.