இட ஒதுக்கீடுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை மும்பை, தானேயில் மராத்தா சமூகத்தினர் போராட்டம்


இட ஒதுக்கீடுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை மும்பை, தானேயில் மராத்தா சமூகத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2020 5:07 AM IST (Updated: 21 Sept 2020 5:07 AM IST)
t-max-icont-min-icon

இட ஒதுக்கீடுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தை எதிர்க்கும் விதமாக மும்பை, தானேயில் மராத்தா சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

மராத்தா சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கடந்த ஆட்சியின் போது மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடைவிதித்து உள்ளது. இந்த உத்தரவு பல ஆண்டுகளாக இடஒதுக்கீடுக்காக போராடிய மராத்தா சமூகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் மராத்தா கிராந்தி மோர்ச்சா அமைப்பினர் நேற்று மும்பை மற்றும் தானேயில் இடஒதுக்கீடு கேட்டு பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் லால்பாக், செம்பூர், தகிசர், பாந்திரா உள்ளிட்ட சுமார் 18 இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போராட்டக்காரர்கள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடையில் வந்து இருந்தனர். மேலும் அவர்கள் மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் வரை மாநில அரசு அறிவித்து உள்ள போலீஸ் ஆள்தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மும்பையில் நடந்த போராட்டத்தில் டப்பா வாலாக்களும் கலந்து கொண்டனர். டப்பா வாலாக்களில் 99 சதவீதம் பேர் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள் என அதன் சங்கதலைவர் சுபாஷ் தாலேகர் கூறினார்.

இதேபோல தானேயில் மராத்தா அமைப்பினர் நீதி தேவதை முன் இடஒதுக்கீடுக்காக மண்டியிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் நடத்துவதை தவிர்க்கவே மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் மராத்தா சமூகத்தினருக்கு ரூ.1,500 கோடி திட்டங்களை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story