நெல்லித்தோப்பு தொகுதியில் கொரோனா பரிசோதனை வீடு வீடாக பொதுமக்களுக்கு அழைப்பு


நெல்லித்தோப்பு தொகுதியில் கொரோனா பரிசோதனை வீடு வீடாக பொதுமக்களுக்கு அழைப்பு
x
தினத்தந்தி 21 Sept 2020 5:21 AM IST (Updated: 21 Sept 2020 5:21 AM IST)
t-max-icont-min-icon

நெல்லித்தோப்பு தொகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நாராயணசாமி அழைப்பு விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மத்திய நிபுணர்கள் குழு அறிவுறுத்தலின் பேரில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாள்தோறும் சராசரியாக 4,500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங் கள் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. அதிகம் தொற்று பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்ட இடங்களில் சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நெல்லித்தோப்பு மேட்டுத்தெருவை சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுகாதார துறை அறிவுறுத்தலின்படி நேற்று அங்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த பணிகளை அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும், முதல்-அமைச்சருமான நாராயணசாமி ஆய்வு செய்தார்.

இதன்பின் அந்த பகுதியில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனைக்கு வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். அவ்வாறு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், ஜான்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story