மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி பலி
x
தினத்தந்தி 21 Sept 2020 6:40 AM IST (Updated: 21 Sept 2020 6:40 AM IST)
t-max-icont-min-icon

வேலாயுதம்பாளையம் அருகே தந்தைக்கு சாப்பாடு கொடுக்க மோட்டார் சைக்கிளில் சென்ற காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி கார் மோதி பரிதாபமாக இறந்தார்.

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே குமரன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53) . இவர் புகளூர் காகித ஆலையில் ரோல் பிரிவில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது தந்தை கருப்பண்ணன் மூர்த்தி பாளையத்தில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை சுப்பிரமணி தனது மோட்டார் சைக்கிளில் மூர்த்திபாளையத்தில் உள்ள தனது தந்தைக்கு சாப்பாடு கொடுக்க சென்று கொண்டிருந்தார்.

சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாணப்பரப்பு பிரிவு அருகே மூர்த்தி பாளையம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளை வலதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது பின்னால் கரூர் நோக்கி வந்த அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக சுப்பிரமணி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.

பலி

உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரது மகன் விக்னேஷ் (23) என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த விக்னேஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.

காங்கேயம் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஆம்புலன்சிலேயே சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்னேஷ் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story