கோட்டூர் ஒன்றியத்தில் 12 கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் அமைச்சர் தொடங்கி வைத்தார்


கோட்டூர் ஒன்றியத்தில் 12 கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Sept 2020 7:07 AM IST (Updated: 21 Sept 2020 7:07 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் ஒன்றியத்தில் 12 கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் பெருகவாழ்ந்தான், தேவதானம், குமட்டித்திடல், களப்பால், ஆதிச்சபுரம், சேந்தமங்கலம், விக்கிரபாண்டியம், மாவட்டக்குடி, சேந்தங்குடி ஆகிய 9 ஊராட்சிகளை சேர்ந்த 12 கிராமங்கள் பயன்படும் வகையில் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான திட்டம் ரூ.3 கோடியே 99 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் 2,564 குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான குழாய் இணைப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா பெருகவாழ்ந்தான் கிராமத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார்.

மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, ஒன்றியக்குழு தலைவர் மணிமேகளை முருகேசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ரமேஷ்பாபு வரவேற்றார். அமைச்சர் காமராஜ் திட்டத்தை தொடங்கி வைத்து மேல்நிலை தொட்டிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதிப்பு இல்லை

வேளாண் மசோதாவால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என முதல்-அமைச்சர் தெளிவாக தெரிவித்து விட்டார். வரலாற்று சிறப்புமிக்க அ.தி.மு.க. செயற்க்குழு கூட்டம் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 925 வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் வட்டார வளர்ச்சி அதிகாரி சாந்தி, கூட்டுறவு சங்க தலைவர்கள் சுப்பிரமணியன், செல்லதுரை, பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 108 ஆம்புலன்ஸ் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கி, அதன் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், ஒன்றிய ஆணையர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமக்கோட்டையை சுற்றி உள்ள 15 கிராமங்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் திருமக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பிரியங்கா, வட்டார மருத்துவ அதிகாரி அன்பரசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரேணுகா வெற்றிவேல், ஊராட்சி தலைவர் சுஜாதா ஜெயசீலன், கூட்டுறவு சங்க தலைவர் பூபாலன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜீவானந்தம், மன்னை நகரசபை முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story