மன்னார்குடியில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மன்னார்குடியில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2020 7:10 AM IST (Updated: 21 Sept 2020 7:10 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது

இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை என்று கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவையில் தாக்கல்

இந்த நிலையில் விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய இரு மசோதாக்களும் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது என கூறி மன்னார்குடியை அடுத்த அசேஷம் மெயின் ரோட்டில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு பேரவை சார்பில் தலைவர் சாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சட்ட மசோதா நகலை தீ வைத்து எரித்து விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story