மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இந்து மகாசபா ஆர்ப்பாட்டம் குமரியில் 200 இடங்களில் நடந்தது


மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இந்து மகாசபா ஆர்ப்பாட்டம் குமரியில் 200 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 21 Sept 2020 7:33 AM IST (Updated: 21 Sept 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அகில பாரத இந்து மகா சபா சார்பில் நேற்று குமரி மாவட்டத்தில் 200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

தமிழகத்தில் மும்மொழி கொள்கை வேண்டும், தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் இந்தி பயிற்றுவிக்க வேண்டும், தமிழக அரசின் இருமொழி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி குமரியில் இந்து மகா சபா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவிலை பொறுத்த வரையில் வேப்பமூடு பூங்கா முன்பு, ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு, அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை எதிரில், ராமன்புதூர், புன்னைநகர், இருளப்பபுரம் உள்பட 52 இடங்களில் நடந்தது.

போலீஸ் பாதுகாப்பு

வேப்பமூடு பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். பசு பாதுகாப்பு தலைவர் மனோஜ்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். காந்தி, கோபி, அமிர்தலிங்கம், மகேஷ் விவேக் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டம் காரணமாக வேப்பமூடு பூங்கா சுற்றுவட்டார பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சாமிதோப்பு மேற்கு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து மகாசபா துணை தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வெற்றிவேலன் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அகில பாரத இந்து மகா சபா சார்பில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை உள்பட மொத்தம் 200 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்ததாக அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Next Story