தளி ஒன்றியத்தில் ரூ.77 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு


தளி ஒன்றியத்தில் ரூ.77 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 21 Sep 2020 2:12 AM GMT (Updated: 21 Sep 2020 2:12 AM GMT)

தளி ஒன்றியத்தில் ரூ.77 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.77 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணிகள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தளி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டசத்து திட்டம் சார்பாக போஷான் அபியான் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக பேளகொண்டப்பள்ளி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நுண்ணுயிர் உர மையம் கட்டுமான பணிகளையும், கலுகொண்டப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தேவகானப்பள்ளி ஊராட்சியில் ஓசூர் தளி ரோடு முதல் சாலபோகனப்பள்ளி வரை சாலை அமைக்கும் பணி, கோட்டமடுவு ஊராட்சி சாமநத்தம் கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர் மட்ட குடிநீர் நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க உத்தரவு

பின்னர் கோட்டமடுவு ஊராட்சி கோபசந்திரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார். உளிவீரனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தேசிய ஊட்ட சத்து மாத விழாவையொட்டி கலெக்டர் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டசத்து குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து பாரம்பரிய உணவு மற்றும் ஊட்டசத்து உணவு குறித்து விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மாவு, கொழு, கொழு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் மதக்கொண்டப்பள்ளி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் சத்துணவு உண்ணும் 359 மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் அரிசி, பருப்பு மற்றும் முட்டை உள்ளிட்ட உலர் உணவு பொருட்களை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து அஞ்செட்டி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.

அப்போது தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் மாது, ஒருங்கிணைந்த ஊட்ட சத்து திட்ட அலுவலர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன், அஞ்செட்டி தாசில்தார் குமரவேலு, ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story