மணலி புதுநகரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து


மணலி புதுநகரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 21 Sept 2020 8:22 AM IST (Updated: 21 Sept 2020 8:22 AM IST)
t-max-icont-min-icon

மணலி புதுநகரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசமாயின.

திருவொற்றியூர்,

மணலி புதுநகர் அருகே விச்சூரில் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த ராபர்ட் என்பவருக்கு சொந்தமான மாத்திரைகளுக்கான மூலப்பொருள் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மூலப்பொருள் ஆந்திராவுக்கு அனுப்பப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை ஆகும்.

இந்தநிலையில் நேற்று காலை 9 மணியளவில் இந்த தொழிற்சாலையில் இருந்து புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மணலி புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் சற்று நேரத்தில் ரசாயன தொழிற்சாலையில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

மூச்சுத்திணறல்

ரசாயன பொருட்கள் என்பதால் பல அடி உயரத்துக்கு கரும்புகை எழுந்தது. அந்த பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டதால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களுக்கு லேசான மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதவரம், திருவொற்றியூர், மணலி போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி ரசாயன தொழிற்சாலையில் எரிந்த தீயை அணைத்தனர். முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த ரசாயன பேரல்களையும் அப்புறப்படுத்தினர். எனினும் தீ விபத்தில் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி மணலி புதுநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story