தடை உத்தரவை மீறி வைகை அணைக்கு குடும்பத்துடன் வருகை தரும் சுற்றுலா பயணிகள்


தடை உத்தரவை மீறி வைகை அணைக்கு குடும்பத்துடன் வருகை தரும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 21 Sept 2020 8:50 AM IST (Updated: 21 Sept 2020 8:50 AM IST)
t-max-icont-min-icon

தடை உத்தரவையும் மீறி வைகை அணை பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

ஆண்டிப்பட்டி,

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பிரதான சுற்றுலா தலமான வைகை அணை மற்றும் பூங்கா மூடப்பட்டு கிடக்கிறது. இங்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது. மேலும் பூங்காவை திறக்க இந்த மாத இறுதிக்குள் தமிழக அரசு உத்தரவிடும் என்ற எதிர்பார்ப்பில் வைகை அணை பூங்காவை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் மாதக்கணக்கில் வீடுகளில் முடங்கியிருந்த மக்கள், தற்போது வெளியே சகஜமாக நடமாட தொடங்கியுள்ளனர். இதனால் 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருக்கும் வைகை அணைக்கு மக்கள் குடும்பம், குடும்பமாக வரத்தொடங்கியுள்ளனர். பூங்காவிற்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்துடன் வரும் பொதுமக்களை போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வைகை அணை மற்றும் பூங்காவில் குவிந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

சுற்றுலா பயணிகள்

இதுகுறித்து போலீசார் கூறுகையில், வைகை அணை மற்றும் பூங்கா மூடப்பட்டுள்ளது என்று தெரிந்தும் மக்கள் கூட்டம், கூட்டமாக அணைக்கு வருவதால் அவர்களை திருப்பி அனுப்புவது பெரும் சிரமமாக உள்ளது என்றனர்.

சுற்றுலா பயணிகள் கூறுகையில், சுற்றுலா இடங்களுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் வைகை அணை பூங்காவிற்கும் மக்கள் சமூக இடைவெளியுடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர்.

Next Story