பிளாஸ்டிக் படகில் வந்த சிங்கள போலீஸ்காரர்: தனுஷ்கோடிக்கு அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


பிளாஸ்டிக் படகில் வந்த சிங்கள போலீஸ்காரர்: தனுஷ்கோடிக்கு அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Sep 2020 3:32 AM GMT (Updated: 21 Sep 2020 3:32 AM GMT)

தனுஷ்கோடிக்கு அழைத்து வந்து இலங்கை காவலரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பாலம் கடற்கரையில் கடந்த 4-ந் தேதி இரவு இலங்கையில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் சிங்கள போலீஸ்காரர் பிரவீன்குமார் பண்டாரா (வயது 28) வந்து இறங்கினார்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமேசுவரம் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று சிங்கள போலீஸ்காரரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவர் ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு கடலோர போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 17-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரவீன்குமார் பண்டாராவை நீதிமன்ற அனுமதியுடன் 4 நாள் விசாரணைக்காக சிறையில் இருந்து அழைத்து வந்தனர்.

பின்னர் அவரை நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜிவ் மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் உள்ளிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து அவர் வந்திறங்கிய பாலம் கடற்கரை மற்றும் அவர் சுற்றித்திரிந்த கடற்கரைப்பகுதி இரவில் அவர் தூங்கிய இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் பார்வையிட்டதுடன் அந்த பகுதியில் உள்ள மீனவர்களிடம் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போலீசார் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

தாதாவுடன் தொடர்பா?

இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-

தனுஷ்கோடிக்கு வந்திறங்கிய இலங்கை போலீஸ்காரரை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் போதுமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் பயன்படுத்தி வரும் செல்போன் எண்களை வைத்து அவர் யாருடன் பேசி உள்ளார், சர்வதேச அளவில் யாருடனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இலங்கை தாதாவுடன் ஏதும் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story