பெங்களூருவில், நகைக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு 3½ கிலோ தங்க நகைகள் கொள்ளை - துப்பாக்கி முனையில் கைவரிசை காட்டிய 2 பேருக்கு வலைவீச்சு


பெங்களூருவில், நகைக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு 3½ கிலோ தங்க நகைகள் கொள்ளை - துப்பாக்கி முனையில் கைவரிசை காட்டிய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Sept 2020 3:22 AM IST (Updated: 22 Sept 2020 3:22 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நகைக்கடைக்குள் புகுந்து உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு 3½ கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கி முனையில் இந்த கொள்ளையை அரங்கேற்றிய2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு ஜாலஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பி.இ.எம்.எல். சர்க்கிள் அருகே எம்.இ.எஸ். மெயின் ரோட்டில் ராகுல் ஜெயின் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் அடகுக்கடை உள்ளது. நேற்று முன்தினம் ராகுல் கடையை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அந்த சந்தப்பத்தில் தங்க நகைகள் வாங்குவதற்காக 2 நபர்கள் வந்தனர். முதலில் அந்த நபர்கள் தங்க சங்கிலி வேண்டும் என்றும் கேட்டனர். உடனே ராகுலும் கடையில் இருந்த தங்க சங்கிலிகளை எடுத்து காண்பித்தார். அவற்றை 2 நபர்களும் பார்த்தார்கள்.

பின்னர் தங்க மோதிரம் வேண்டும் என்று 2 பேரும் கூறினார்கள். இதனால் தங்க மோதிரங்களை எடுத்து வருவதற்காக கடைக்குள் இருந்த மற்றொரு அறைக்கு ராகுல் சென்றார். அந்த சந்தர்ப்பத்தில் 2 நபர்களும், அவரை பின்தொடர்ந்து சென்றனர். இதை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட முயன்றார். உடனே ராகுலிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி, கொலை செய்துவிடுவதாக 2 நபர்களும் மிரட்டல் விடுத்தார்கள்.

அதன்பிறகு, ராகுல் வாயில் துணியை அமுக்கியதுடன், அவரது கை, கால்களை மர்மநபர்கள் துணியால் கட்டினார்கள். அப்போது ஒரு மர்மநபர் மட்டும் ராகுலை துப்பாக்கி முனையில் மிரட்டிய வண்ணம் இருந்தார். மற்றொரு மர்மநபர் கடையில் வியாபாரத்திற்காக இருந்த தங்க நகைகளை கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டார். அதன்பிறகு கடையில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து 2 நபர்களும் தப்பி ஓடிவிட்டார்கள். நீண்ட நேரம் போராடி தனது கை, காலில் கட்டி இருந்த துணியை ராகுல் அவிழ்த்தார்.

அப்போது கடைக்குள் இருந்த ஏராளமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் உடனடியாக ஜாலஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் ராகுல் கடைக்கு போலீசார் விரைந்து வந்தனர். கடையில் பதிந்திருந்த மர்மநபர்களின் கைரேகையை நிபுணர்கள் பதிவு செய்து கொண்டார். அவரது கடையில் இருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி மோப்ப நாயும் ஓடிவிட்டு நின்றுவிட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் சென்று விசாரித்தனர். அப்போது ராகுல் கடையில் இருந்து 3½ கிலோ எடையுள்ள தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கடையில் ராகுல் மட்டும் தனியாக இருப்பது பற்றி நன்கு அறிந்து கொண்ட மர்மநபர்களே இந்த கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும் மர்மநபர்களை பிடிக்க ராகுல் கடையை சுற்றியுள்ள கேமராக்களையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஜாலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் ஜாலஹள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story