புதிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக பெங்களூருவில் விவசாய சங்கங்கள் பிரமாண்ட பேரணி போக்குவரத்து நெரிசல்-வாகன ஓட்டிகள் அவதி


புதிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு  எதிராக பெங்களூருவில் விவசாய சங்கங்கள் பிரமாண்ட பேரணி போக்குவரத்து நெரிசல்-வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 22 Sept 2020 4:18 AM IST (Updated: 22 Sept 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

புதிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராகவும், அரசை கண்டித்தும் பெங்களூருவில் விவசாய சங்கங்கள் சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நிலச்சீர்திருத்தம், மின்சார சீர்திருத்தம், ஏ.பி.எம்.சி. சட்ட திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தங்கள் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கூறி வருகின்றன. இதன் காரணமாக 3 சட்ட திருத்தங்களையும் அமல்படுத்த கூடாது என்று விவசாய சங்கங்கள் அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, அந்த சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பெங்களூருவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன.

அதன்படி, நேற்று காலையில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரமுகர்கள், உறுப்பினர்கள், விவசாயிகள் நேற்று காலையில் வருகை தந்தனர். பீதர், சாம்ராஜ்நகர், துமகூரு, பல்லாரி உள்பட மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். குறிப்பாக 300-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் பெங்களூருவுக்கு வருகை தந்திருந்தனர்.

பின்னர் சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் பிரமாண்ட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது கர்நாடக அரசுக்கு எதிராகவும், புதிய சட்ட திருத்தங்களை அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தியும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினார்கள். அதன்பிறகு, சுதந்திர பூங்காவில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அங்கு வைத்தும் புதிய சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும், கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராகவும் விவசாயிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்தார்கள். இந்த போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா தனது தலைமையிலான அரசு விவசாயிகளுக்கான அரசு என்று அடிக்கடி கூறி வருகிறார். விவசாயிகளுக்கு எதிராக ஏ.பி.எம்.சி. உள்பட 3 சட்ட திருத்தங்களை அமல்படுத்த முதல்-மந்திரி எதற்காக முன்வந்துள்ளார்? என்பது தெரியவில்லை. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும், அந்த சட்ட திருத்தங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன?. விவசாயிகளுக்கான சட்ட திருத்தங்களை அமல்படுத்த நினைக்கும் இந்த அரசு, விவசாயிகளின் அரசு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். விவசாயிகளுக்கு எதிரான 3 சட்ட திருத்தங்களையும் அரசு அமல்படுத்தக்கூடாது.

அந்த சட்ட திருத்தங்களை அமல்படுத்த மாட்டோம் என்று அரசு கூறும்வரை விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை கைவிட போவதில்லை. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் வரை பகல், இரவாக இந்த போராட்டம் தொடரும். இந்த விவகாரத்தில் அரசு சரியான முடிவு எடுக்கவில்லை எனில், விவசாயிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவார்கள். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க இந்த அரசு முன்வரவில்லை. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான நிவாரணம் வழங்கவில்லை. விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்தங்களை அமல்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு விவசாயிகள் நடத்திய பிரமாண்ட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதால், சேஷாத்திரி ரோடு, மெஜஸ்டிக் சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

அதே நேரத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் நடந்த போராட்டம், பேரணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. 2 துணை போலீஸ் கமிஷனர்கள், 9 உதவி போலீஸ் கமிஷனர்கள், 26 இன்ஸ்பெக்டர்கள், 24 சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story