திருமழபாடி நேரடி கொள்முதல் நிலையத்தில் 8 நாட்களாக சாலை ஓரத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்
திருமழபாடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 8 நாட்களாக சாலை ஓரத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் ஆகிய ஒன்றியங்களில் 21 வருவாய் கிராமங்கள் காவிரி பாசன பகுதியாகும். இப்பகுதிகளில் காவிரி நீர் மற்றும் நிலத்தடி நீர் மூலம் முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில் சம்பா நெல் சாகுபடிக்கு 48 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர் நவரை சாகுபடிக்கு 7 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி பகுதியில் 1,400 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் திருமழபாடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கடந்த 8 நாட்களாக விவசாயிகள் 7 ஆயிரம் நெல் மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். அவ்வாறு கொண்டு வரப்பட்ட நெல், கொள்முதல் நிலையம் மற்றும் சாலை ஓரத்தில் 500 மீட்டர் தூரத்திற்கு கொட்டப்பட்டு இரவு, பகலாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
கோரிக்கை
அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்தும், பன்றிகள் தின்பதாலும் என பல்வேறு சிரமத்திற்கு விவசாயிகள் ஆளாகி வருகின்றனர். கடந்த 5 நாட்களாக திருமழபாடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லாரிகள் வராத காரணத்தாலும், நெல் அளக்கப்படாத காரணத்தாலும் நெல் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதனால் 8 நாட்களாக சாலை ஓரத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் முப்போகம் விளைச்சல் செய்யும் நிலையில், அப்பகுதியில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இல்லையெனில் தனியாரிடம் நெல் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்படுவதாகவும், இதனால் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story