மணல் அள்ள அனுமதி வழங்காவிட்டால் மாட்டு வண்டிகளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க தொழிலாளர்கள் முடிவு
மணல் அள்ள அனுமதி வழங்காவிட்டால் மாட்டு வண்டிகளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதி வெள்ளாற்றில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதைத்தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை தலைமையில் செந்துறை தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) அப்துல் கபூர், மாட்டு வண்டி தொழிலாளர்கள் சார்பாக அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது வருகிற 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் பூங்கோதை தெரிவித்தார்.
தொழிலாளர்கள் முடிவு
இதைத்தொடர்ந்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் 15 நாட்களுக்குள் மணல் அள்ள அனுமதி வழங்கவில்லை என்றால் டயர் வண்டி மற்றும் மாடுகளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்று கூறி சென்றனர். மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரளாக தாசில்தார் அலுவலகத்தில் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story