குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுவதால்: பி.ஆர்.டி.சி. பஸ்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் - கொரோனா தொற்று பரவும் அபாயம்


குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுவதால்: பி.ஆர்.டி.சி. பஸ்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் - கொரோனா தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 22 Sept 2020 5:55 AM IST (Updated: 22 Sept 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த எண்ணிக்கையில் பி.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருபுவனை,

புதுவை மாநிலத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பஸ், ரெயில், விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதன்பின் தளர்வுகள் தளர்த்தப்பட்டதையொட்டி அரசு சாலை போக்குவரத்துக் கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் காரைக்கால் மற்றும் கிராமப்புறங்களுக்கு ஒருசில பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை.

இந்தநிலையில் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கி செயல்பட்டு வருகிறது. பயணிகளை ஏற்றி, இறக்காமல் புதுவை வழியாக செல்வதற்கு மட்டும் தமிழக அரசு பஸ்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் புதுவை எல்லையில் தமிழக பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. அதாவது, மகதடிப்பட்டு, கோரிமேடு, கனகசெட்டிக்குளம், முள்ளோடை ஆகிய பகுதிகள் வரை இந்த பஸ்கள் வந்து செல்கின்றன.

அவற்றில் வந்து இறங்கும் பயணிகள் புதுவைக்குள் வருவதற்கு வாகன வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ஆட்டோ, கார் டிரைவர்கள் பயணிகளிடம் அதிக தொகை வாங்கிக்கொண்டு புதுவைக்கு அவர்களை அழைத்து வருகின்றனர்.

புதுவை அரசு சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் குறைந்த எண்ணிக்கையிலான உள்ளூர் பஸ்களும் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டும் வந்து செல்வதால் அந்த பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. தொற்று காரணமாக ஒரு பஸ்சில் அதிகபட்சமாக 24 பேர் மட்டுமே பயணம் செய்யவேண்டும் என்று அரசு உத்தர விட்டுள்ளது. ஆனால் இதை பொதுமக்கள் கடைபிடிப்பதில்லை. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Next Story