கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்


கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 22 Sept 2020 5:59 AM IST (Updated: 22 Sept 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலத்தில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவ-மாணவிகள் இறுதி பருவத்தேர்வை புத்தகங்களை பார்த்து எழுதினர்.

புதுச்சேரி,

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் கல்லூரி இறுதி பருவ தேர்வு குறித்து முடிவு எதுவும் செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இறுதி தேர்வை நடத்த வேண்டியது கட்டாயம் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) உறுதியாக அறிவித்தது.

இதுகுறித்து முடிவு செய்ய அதிகாரம் வழங்குமாறு பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தேர்வை நடத்த வேண்டும் என்பதில் பல்கலைக்கழக மானியக்குழு உறுதியாக இருந்தது. செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டது.

இதையடுத்து இறுதி பருவ தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுகுறித்து அந்தந்த பல் கலைக்கழகங்களுக்குட்பட்ட கல்லூரிகள் சார்பில் மாணவர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகம், புதுச்சேரியிலும் கல்லூரி இறுதி பருவ தேர்வுகள் தொடங்கி தற்போது நடந்து வருகின்றன.

மத்திய அரசு நிறுவனமான புதுவை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வந்த மாணவ-மாணவிகளுக்கான பருவத் தேர்வு கடந்த 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடத்தப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக இந்த தேர்வு 21-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) தள்ளி வைக்கப்பட்டு அதன்படி நேற்று நடந்தது.

முன்னதாக புதுவை பல் கலைக்கழகம் சார்பில் விடுக்கப்பட்டு இருந்த செய்திக்குறிப்பில், ‘இறுதி பருவத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தங்களின் விருப்பப்படி கல்லூரிகளுக்கு நேரில் சென்றோ, ஆன்லைன் மூலமாகவோ தேர்வை எழுதலாம். புத்தகம், குறிப்புகளை பார்த்து தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் புதுவை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கலை-அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனம், சட்டக் கல்லூரி ஆகியவற்றில் படித்த மாணவ-மாணவிகள் நேற்று தேர்வு எழுதினர். சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நேற்று ஆன்லைன், ஆப்லைன் மூலமாக தேர்வுகளை எழுதினார்கள்.

காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரி, சட்டக்கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு நடந்தது. அப்போது மாணவர்கள் புத்தகங்கள், குறிப்புகளை பார்த்து தேர்வு எழுதினார்கள். தேர்வு மையங்களில் பணியில் இருந்த பேராசிரியர்கள் மாணவர்கள் புத்தகங்கள், குறிப்புகளை பரிமாறிக் கொள்ளாத வகையில் கண்காணித்தனர்.

வீடுகளில் இருந்தபடி ஆன்லைன் மூலமாக கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதினார்கள். ஏற்கனவே அறிவுறுத்தி இருந்ததன் அடிப்படையில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து செல்போன் மூலமாக தாங்கள் படித்து வரும் கல்லூரிகளுக்கு பதிவெண், பாடப்பிரிவு உள்ளிட்ட தகவல்களுடன் அனுப்பி வைத்தனர்.

Next Story