தஞ்சை அருகே, குவாரியில் மண் அள்ளிய லாரிகள் பறிமுதல்: போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


தஞ்சை அருகே, குவாரியில் மண் அள்ளிய லாரிகள் பறிமுதல்: போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Sept 2020 7:56 AM IST (Updated: 22 Sept 2020 7:56 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே குவாரியில் மண் அள்ளிய லாரிகளை பறிமுதல் செய்த போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே முத்தாண்டிப்பட்டியில் உள்ள ஏரியில் மண் குவாரி செயல்பட்டு வருகிறது. தஞ்சையை சேர்ந்த தனியார் நிறுவனம் இதற்காக முறையான உரிமம் பெற்று பொக்லின் எந்திரங்கள் மூலம் ஏரியில் மண் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் முத்தாண்டிப்பட்டி குவாரியில் மண் அள்ளிக்கொண்டிருந்த 2 லாரிகளையும், பொக்லின் எந்திரத்தையும் பறிமுதல் செய்து, டிரைவர்கள் 2 பேரை கைது செய்தனர்.

இதை கண்டித்து நேற்று தஞ்சை-திருச்சி சாலையில் பூதலூர் பிரிவு சாலை அருகே முத்தாண்டிப்பட்டி கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் லாரி உரிமையாளர்கள், குவாரி ஒப்பந்ததாரர்கள் மற்றும் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர். அப்போது போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

முறைகேடு

இதை அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று குவாரி ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:- தனியார் நிறுவனம் உரிய அனுமதி பெற்று மண் எடுத்து வருகிறார்கள்.

ஆனால் மண் எடுத்து செல்லும் லாரியில் கொடுத்து அனுப்பும் ஆவணங்கள் சரியில்லை. போலி ரசீதுகள் மூலம் சில கணக்குகள் பராமரிக்கப்படுகிறது. இதனை ஆய்வு செய்துள்ளேன். இதில் முறைகேடு நடைபெற்று இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. இனி தொடர்ந்து இது போன்ற செயல்கள் நடைபெற்றால் தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு ஆய்வறிக்கை அனுப்பப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும்.

போலீசார் மீதும் நடவடிக்கை

மேலும் கிராம மக்களுக்கு தவறான தகவல் தந்து போராட்டத்தில் ஈடுபட அவர்களை தூண்டிவிட்டால் தனியார் நிறுவனத்தினர் மீதும் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி வரும் நாட்களில் மண் குவாரி அருகிலேயே ஷெட் அமைத்து முறையாக ஆவணங்களை பராமரித்து மண் எடுத்து செல்ல வேண்டும். போலீசார் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த வழக்கில் போலீசார் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மண் குவாரிக்கு வந்த பூதலூர் தாசில்தார் சிவக்குமார், ஆவணங்களை முறையாக பராமரித்து மண் எடுக்க அறிவுறுத்தினார்.

Next Story