பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வு தொடங்கியது 427 பேர் எழுதினர்


பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வு தொடங்கியது 427 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 22 Sept 2020 8:21 AM IST (Updated: 22 Sept 2020 8:21 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வுகள் நேற்று தொடங்கியது. நேற்று நடந்த தமிழ் தேர்வினை 427 மாணவ-மாணவிகள் எழுதினர்.

நாமக்கல்,

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் தொடக்கக்கல்வி பட்டய தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கான தனித் தேர்வுகள் நேற்று தொடங்கியது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தனித்தேர்வும், 4 தேர்வு மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்தும், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்தும் தேர்வுகளை எழுதினர்.

மேலும் தொடக்கக்கல்வி பட்டய தனித்தேர்வு ஒரு தேர்வு மையத்தில் நடந்தது. இந்த தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். நேற்று நடந்த தமிழ் தனித்தேர்வை எழுத எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் 390 பேரும், பிளஸ்-2 மாணவர்கள் 135 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.

ஆய்வு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 312 பேர் எழுதினர். 78 பேர் தேர்வுக்கு வரவில்லை. அதேபோல் பிளஸ்-2 தேர்வை 115 பேர் எழுதினர். 20 பேர் எழுதவில்லை. மேலும் தொடக்க கல்வி பட்டயத் தனித்தேர்வை 70 பேர் எழுதினர். 32 பேர் தேர்வுக்கு வரவில்லை. திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தனித்தேர்வினை 19 பேர் எழுதினர்.

அனைத்து மையங்களிலும் தேர்வு எழுத வந்தவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story