1,941 பயனாளிகளுக்கு இருசக்கர வாகன மானியம் ஒதுக்கீடு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்


1,941 பயனாளிகளுக்கு இருசக்கர வாகன மானியம் ஒதுக்கீடு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 22 Sep 2020 5:46 AM GMT (Updated: 22 Sep 2020 5:46 AM GMT)

வேலூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 1,941 பயனாளிகளுக்கு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்,

உழைக்கும் மகளிர் பணிச்சுமையை எளிதாக்கும் வகையில் அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு மானியத்தொகை உடனடியாக கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளே இந்த திட்டத்தினை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்அடிப்படையில் 2019-2020-ம் ஆண்டிற்கு வேலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,941 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனத்திற்கான மானியம் விடுவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஓட்டுனர் உரிமம் அல்லது பழகுனர் உரிமம் இருத்தல் வேண்டும். மானியம்பெற ஓட்டுனர் உரிமம் கட்டாயம் இருக்க வேண்டும்.

முறைசார்ந்த, முறைசாரா பணியில்உள்ள பெண்கள், கடைகள், இதர நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், சிறு கடை உள்ளிட்ட சுயதெழில் செய்யும் பெண்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் அமைப்புகளில் பணிபுரியும் பெண்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், மக்கள் கற்றல்மையம் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோர், ஒப்பந்த ஊழியர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், சமூக சுகாதார பெண் ஆர்வலர்கள் பயன்பெறலாம். அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.

தனி கவுண்ட்டர்கள்

உள்ளாட்சி நிறுவனங்கள் விண்ணப்பங்கள் வினியோகம்செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கும் தனியாக கவுண்ட்டர்கள் திறக்கவேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களை www.tnatws.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, களஆய்வு மேற்கொண்டு உரிய அலுவலரால் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது தகுதியுடையதாக இருப்பின் ஆய்வுசெய்து பயனாளியாக தேர்வு செய்யலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story