கல்பட்டு கிராமத்தில் நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


கல்பட்டு கிராமத்தில் நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 Sep 2020 6:26 AM GMT (Updated: 22 Sep 2020 6:26 AM GMT)

கல்பட்டு கிராமத்தில் சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் ஊராட்சி அலுவலகம், தொடக்கப்பள்ளி வழியே அமர்தி மற்றும் ஜமுனாமரத்தூருக்கு சாலை செல்கிறது. சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் வகையில் சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் இந்த பாலம் வழியாக அருகில் உள்ள நிலங்களின் வழியாக வெளியேறும்.

அமிர்தி மற்றும் ஜமுனாமரத்தூர் செல்லும் சாலைக்கு மிக அருகில் உள்ள நிலத்திற்கு அதன் உரிமையாளர் நேற்று சுற்றுச்சுவர் அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி, முன்னாள் தலைவர் ஜீவரத்தினம், துணைத்தலைவர் பழனி மற்றும் பொதுமக்கள் மழைநீர் கால்வாய் வெளியேறும் வழியில் சுற்றுச்சுவர் அமைக்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பணிகள் நிறுத்தம்

மேலும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செல்லும் வரப்பை, கொல்லமேடு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாதையையும், மழைநீர் செல்லும் பாதையும் தடுத்து நிறுத்தும் வகையில் சுற்றுச்சுவர் அமைக்கக்கூடாது என வலியுறுத்தினர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக போளூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெருமாள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சம்பவ இடத்திற்கு அவர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். கல்பட்டு கிராம நிர்வாக அதிகாரி நித்யானந்தம் மழைநீர் கால்வாய் செல்ல இடம் விட்டு சுற்றுச்சுவர் கட்டிக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கினார். இதையடுத்து தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டது. அத்துடன் ஏற்கனவே தோண்டப்பட்ட மண், டிராக்டர் மூலம் அகற்றப்பட்டது.

Next Story