தர்மபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளிலும் ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் - கலெக்டர் மலர்விழி தகவல்
தர்மபுரி மாவட்டத்திலுள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்தார்.
தர்மபுரி,
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழா தர்மபுரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பொதுமக்கள், மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து அளிக்கும் காய்கறி செடிகள் மற்றும் மூலிகை செடிகளை கொண்ட தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தோட்டத்தை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த தோட்டத்தில் புதிய செடிகள் மற்றும் மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வேதநாயகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக மாவட்டத்திலுள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் ஊட்டச்சத்து காய்கறி செடிகள் மற்றும் மூலிகை செடிகளை கொண்ட தோட்டங்களை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தோட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அந்தந்த ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும். அதன்மூலம் குழந்தைகளிடம் உள்ள ஊட்டச்சத்து பற்றாக்குறை பாதிப்பு நிவர்த்தி செய்யப்படும். குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story