சங்ககிரி அருகே, நின்ற பஸ் மீது மினி லாரி மோதல்;டிரைவர் உள்பட 3 பேர் பலி
சங்ககிரி அருகே நின்ற பஸ் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
சங்ககிரி,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து கேரள மாநிலத்திற்கு 45 கூலித்தொழிலாளர்கள் ஆம்னி பஸ்சில் பயணம் செய்தனர். பஸ்சை, கேரள மாநிலம் மலப்புரம் மாஞ்சேரி பகுதியை சேர்ந்த முகமது சல்மான் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் சேலம் வழியாக கோவைக்கு செல்ல சங்ககிரி அருகே களியனூர் பைபாஸ் சாலையில் நேற்று காலை 6.20 மணிக்கு வந்தது.
அப்போது திடீரென பஸ்சின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனது. இதையடுத்து சாலையின் இடதுபுறத்தில் ஓரமாக டிரைவர் முகமது சல்மான் பஸ்சை நிறுத்தினார். பின்னர் இடதுபுற பின் சக்கர டயரை கழற்றி முன் சக்கரத்தில் மாட்டிட பஸ் டிரைவர் முடிவு செய்தார். இதையடுத்து, அவரும், பஸ்சில் வந்த பயணிகளான மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தா முத்துக்கா பாலை குந்துப்பூர் பகுதியை சேர்ந்த அக்தர் கோ ராமி (26), கொல்கத்தா அனிஷ் மலி பகுதியை சேர்ந்த தீபக் பாலா (30) ஆகியோர் சேர்ந்து ஆம்னி பஸ்சின் பின்பக்க இடதுபுற டயரை கழற்றி கொண்டு இருந்தனர்.
இதனிடையே சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி மினிலாரி ஒன்று வந்தது. லாரியை வாழப்பாடியை சேர்ந்த ராஜமன்னார் (27) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது ஆம்னி பஸ் நின்ற பகுதிக்கு அந்த மினிலாரி வந்தது. அங்கு நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சின் பின்பக்கம் எதிர்பாராதவிதமாக மினி லாரி மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் டயரை மாற்றிக்கொண்டு இருந்த ஆம்னி பஸ் டிரைவர் முகமது சல்மான் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
ஒரு மணி நேரம் போராடி மீட்பு
டிரைவருடன் டயரை கழற்றும் பணியில் உதவிய பயணி அக்தர் கோ ராமி, தீபக் பாலா ஆகியோர் மினி லாரி, ஆம்னி பஸ் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் மற்றும் சங்ககிரி தீயணைப்புபடையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காயம் அடைந்த பயணிகள் இருவரையும், மினி லாரியில் சிக்கி தவித்த டிரைவரையும் மற்றும் பலியான பஸ் டிரைவரின் உடலையும் தீயணைப்பு படையினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அக்தர் கோ ராமி இறந்துவிட்டார். மற்றொரு பயணி தீபக் பாலா சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் ராஜமன்னார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story