கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்: சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அனுமதிக்க தடை


கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்: சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அனுமதிக்க தடை
x
தினத்தந்தி 22 Sep 2020 10:45 PM GMT (Updated: 22 Sep 2020 8:43 PM GMT)

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அனுமதிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம், 

சேலம் கொண்டலாம்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 4 மாதங்களாக கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

அதன்பேரில், சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள அந்த ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவ பட்டப்படிப்பு படித்து ஓராண்டு பயிற்சி காலம் முடிக்காத மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நிரந்தர பதிவு பெறாமல் டாக்டர் ஒருவர் சிகிச்சை அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் மருத்துவ கவுன்சிலில் நிரந்தர பதிவு பெறாத டாக்டர் பணியமர்த்தியதாலும் அந்த ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் சிகிச்சைக்காக வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கான உத்தரவை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை துணை இயக்குனர் மலர்விழி வள்ளல் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் உள்ளிட்ட சில புகார்கள் காரணமாக அந்த தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் உள்பட எந்த நோயாளிகளும் அனுமதிக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த புகார் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தகுதியில்லாத நபர்கள் பணியாற்றினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Next Story