திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் - பக்தர்கள் வேண்டுகோள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை முறையாக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. மேலும் மதவழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள கோவிலின் ராஜகோபுரத்தில் இருந்து சாமி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் வரிசையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் செல்ல வட்டங்கள் வரையப்பட்டு இருந்தது.
மேலும் ராஜகோபுரத்தின் நுழைவு பகுதியில் பக்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கைகளுக்கு கிருமி நாசினி தெளிப்பதற்கு 2 எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. பக்தர்களின் உடல் வெப்பநிலையை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அடையாள அட்டை காண்பித்த பின்னரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் ராஜகோபுரத்தின் வழியாக செல்லும் போது கால்கள் கழுவுவதற்கு தண்ணீர் விடப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்தர்கள் வரிசையாக செல்ல அமைக்கப்பட்ட தடுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, முருகர் மற்றும் விநாயகர் சன்னதியில் சாமி தரிசனம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டது. கோவில் பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் அடிக்கடி தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வைக்கப்பட்டு இருந்த கிருமி நாசினி தெளிக்கும் எந்திரம் பழுதடைந்து இருந்தது. இதனால் கோவிலுக்குள் உள்ளே செல்லும் பக்தர்கள் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படாமல் அனுப்பப்பட்டனர்.
மேலும் கால் கழுவுவதற்காக விடப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே, ஒலிப்பெருக்கி மூலம் வெறும் அறிவிப்பாக இல்லாமல் கோவிலுக்கு உள்ளே செல்ல அடையாள அட்டைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் கோவில் நிர்வாக அதிகாரிகள் கிருமி நாசினி தெளிப்பது போன்ற கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story