தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மதுரையை 2-ம் தலைநகராக மாற்ற வேண்டும் - வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை


தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மதுரையை 2-ம் தலைநகராக மாற்ற வேண்டும் - வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Sep 2020 10:15 PM GMT (Updated: 22 Sep 2020 11:07 PM GMT)

தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்காக மதுரையை 2-ம் தலைநகராக மாற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் வரும் முதல்-அமைச்சருக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் பழனிக்குமார், செயலாளர் தமீம்ராசா ஆகியோர் முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- சென்னையைச் சுற்றி உள்ள பகுதிகளில் தற்போதைய மக்கள் தொகை பெருக்கத்தால் இதே நிலை தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் சுமார் 10 மாவட்டங்கள் சென்னையை சுற்றியே உருவாக்கப்படும் தேவை தவிர்க்க முடியாததாகிவிடும்.

தென் மாவட்டம் மற்றும் அங்கு வசிக்கும் மக்கள் நலனுக்கும் வளர்ச்சி பாதைக்கும், வாழ்வாதாரத்திற்கும் உரிய சூழ்நிலையை உருவாக்கி தருவது அரசால் மட்டுமே முடியும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல ரெயில் மற்றும் பேருந்து மார்க்கமாக சென்னை செல்ல சுமார் 14 மணி நேரம் ஆகிறது. எழும்பூர் மற்றும் கோயம்பேட்டில் இருந்து தலைமைச் செயலகம், எழிலகம், ஐகோர்ட்டு செல்ல பஸ், ஆட்டோ மூலம் சுமார் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. அதிலும் குறிப்பாக காலை, மாலை வேளைகளில் திட்டமிட்டபடி எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக தென் மாவட்ட மக்களுக்கு பயணநேரம், மனித உழைப்பு என பலவித இழப்பு ஏற்படுகிறது. இதனால் சுதந்திரம் பெற்ற நாள் முதல் தென்மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக மதுரையை துணை தலைநகரம், இரண்டாம் தலைநகரம் என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்துகொண்டே வருகிறது. இதன் மூலம் 4 மணி நேர பயணத்தில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகியவை ஆகும். சென்னை ஐகோர்ட்டு கிளை அமைந்துள்ளதோடு, எய்ம்ஸ் மருத்துவமனையும் அமைய உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய துறைமுக நகரமான தூத்துக்குடி மதுரையில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ளது.

உலகிலேயே சூரிய ஒளி மின் திட்டத்திற்கு ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் தகுதியானதாக உள்ளது. ஆயிரக்கணக்கான தரிசு நிலங்கள் இந்த மாவட்டங்களில் உள்ளதால் 2-ம் தலைநகருக்கு ஏற்ற வகையில் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தலாம். திருச்சியை 2-ம் தலைநகராக மாற்றினால் திருச்சியில் இருந்து கன்னியாகுமரி 7 மணி நேர பயணம் ஆவதோடு, டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலங்கள் என்பதால் புதிய தொழில்கள், தொழிற்சாலைகள் தொடங்க முடியாது என்பதால் திருச்சி 2-ம் தலைநகராக்க ஏற்றதாக இருக்காது. மேலும், மதுரைக்கும்- திருச்சிக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 120 கிலோமீட்டர் ஆகும்.

எனவே, மதுரையில் இருந்து திருச்சி செல்லும் நான்கு வழிச் சாலையில் சுமார் 50 முதல் 60 கிலோமீட்டர் தூரத்தில் 2-ம் தலைநகர் அமைக்கும் பட்சத்தில் மேற்கண்ட 20 மாவட்ட மக்கள் உள்பட சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாவட்ட மக்களும் பயன்பெற வாய்ப்பு உள்ளது. எனவே, வருவாய்த்துறை அமைச்சர் மக்கள் நலன் மற்றும் பின்தங்கிய பகுதிகளின் வாழ்வாதாரத்திற்கான வளர்ச்சி அடைய செய்யும் வகையில் விடுத்த கோரிக்கையான 2-ம் தலைநகராக மதுரையை மாற்ற முதல்-அமைச்சர் பரிசீலனை செய்து ராமநாதபுரம் விழாவில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Next Story