பெங்களூருவில், மெட்ரோ ரெயில்களுக்கான ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாடு 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - நிர்வாகம் அறிவிப்பு
பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களுக்கான ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் மைசூரு ரோடு முதல் பையப்பனஹள்ளி வரையும், நாகசந்திரா முதல் எலச்சனஹள்ளி வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரெயில்களில் தினமும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வந்தனர். மேலும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதை தவிர்க்கும் வகையில், ஒரு ஆண்டுக்கு பயன்படுத்தும் முறையில் ஸ்மார்ட் கார்டுகளை மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்கி இருந்தது. இந்த ஸ்மார்ட் கார்டுகளை ரீசார்ஜ் செய்து பயணிகள் பயன்படுத்தி வந்தனர். ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தாத பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து ரெயில்களில் பயணம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. சுமார் 6 மாதங்களுக்கு பின்னர் கடந்த 7-ந் தேதி முதல் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஆனாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு ரெயிலில் 400 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக ஸ்மார்ட் கார்டுகளை வைத்திருக்கும் பயணிகளுக்கு மட்டுமே ரெயில்களில் பயணம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய பயணிகள் ஸ்மார்ட் கார்ட்டை வைத்து இருந்தனர். ஆனால் 6 மாதத்திற்கு மேல் மெட்ரோ ரெயில்கள் ஓடாததால், பயணிகள் ஸ்மார்ட் கார்ட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் வருகிற டிசம்பர் மாதம் புதிய ஸ்மார்ட் கார்டை வாங்கும் நிலைக்கும் பயணிகள் தள்ளப்பட்டனர். இதற்கு பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதுபற்றி மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் கவனத்திற்கு சென்றது. இந்த நிலையில் பயணிகளின் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை 10 ஆண்டுகளுக்கு அதாவது வருகிற 2030-ம் ஆண்டு வரை நீட்டித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரி யஷ்வந்த் சவான் கூறுகையில், “மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகளை செய்த பின்னர் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. தற்போது ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தும் பயணிகள் மட்டுமே மெட்ரோ ரெயில்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் கட்டாயமாக ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு இறுதியுடன் ஸ்மார்ட் கார்டின் பயன்பாடு முடிவுக்கு வரும் நிலையில், புதிதாக ஸ்மார்ட் கார்டை வாங்க பயணிகள் வருவார்கள். இதனால் கூட்டம் கூடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக பயணிகளின் ஸ்மார்ட் கார்டின் பயன்பாட்டை 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து உள்ளோம். இந்த நடைமுறை கடந்த 11-ந் தேதி முதல் அமலில் உள்ளது. ஆனால் ரீசார்ஜ் செய்த தொகையை 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அந்த தொகை காலாவதி ஆகிவிடும்” என்று கூறினார்.
பயணிகள் அதிர்ச்சி
ஸ்மார்ட் கார்டின் பயன்பாடு 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது பெங்களூரு மெட்ரோ ரெயில் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே வேளையில் ஸ்மார்ட் கார்டுகளில் ரீசார்ஜ் செய்யப்படும் தொகை 7 நாட்களில் காலாவதியாகிவிடும் என அறிவித்து இருப்பதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story