திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் 2 பேர் பலி - மின்துண்டிப்பு காரணமா?
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 2 பேர் இறந்தனர். மின்துண்டிப்பு ஏற்பட்டதால் அவர்கள் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் சிகிச்சை பெறுவதற்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஒன்றும் தனியாக உள்ளது. இந்த வார்டுகளில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த வார்டில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், செயற்கை சுவாசம் அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தற்போது திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதற்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் நேற்று கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அருகே கட்டிட பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின் இணைப்பு கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த கொரோனா வார்டுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த வார்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் முருகானந்தபுரத்தை சேர்ந்த 67 வயது பெண் மற்றும் வெங்கடேசபுரத்தை சேர்ந்த 59 வயது ஆண் ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர்.
இவர்கள் இறந்த விவரம் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரின் உறவினர்களும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.
அப்போது கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டில் காலை 11 மணி முதல் 11.40 மணிவரை 40 நிமிடம் மின்சார வசதி இல்லாமல் இருந்ததாகவும், அந்த நேரத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும் மூச்சுத்திணறல் இருந்து வந்ததாகவும், அப்போது செயற்கை சுவாசத்திற்கான ஆக்சிஜன் வழங்குவது தடைபட்ட காரணத்தால் 2 பேரும் இறந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story