புதுச்சேரியில் 493 பேருக்கு கொரோனா


புதுச்சேரியில் 493 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Sept 2020 7:28 AM IST (Updated: 23 Sept 2020 7:28 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மேலும் 493 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 493 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 389 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 901 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 426 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. 23 ஆயிரத்து 684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 பேர் உயிரிழப்பு

அவர்களில் 4 ஆயிரத்து 757 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 1,794 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 963 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 18 ஆயிரத்து 454 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒரே நாளில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கதிர்காமத்தை சேர்ந்த 87 வயது மூதாட்டி, தட்டாஞ்சாவடி கங்கையம்மன்கோவில் வீதியை சேர்ந்த 84 வயது மூதாட்டி, கருவடிக்குப்பம் பாரதி நகரை சேர்ந்த 37 வயது ஆண் ஆகியோரும், ஜிப்மரில் நெல்லித்தோப்பு தந்தை பெரியார் நகரை சேர்ந்த 86 வயது முதியவர், முத்தியால்பேட்டையை சேர்ந்த 87 வயது மூதாட்டி, ஏனாமில் 46 வயது பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

77.92 சதவீதம்

ஒட்டுமொத்தமாக 473 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது புதுச்சேரி பகுதியில் 403 பேரும், காரைக்காலில் 31 பேரும், ஏனாமில் 39 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் உயிரிழப்பு 2 சதவீதமாகவும், குணமடைவது 77.92 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story