கஞ்சா கலாசாரத்தை ஒடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு வெங்கடேசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


கஞ்சா கலாசாரத்தை ஒடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு வெங்கடேசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Sept 2020 7:35 AM IST (Updated: 23 Sept 2020 7:35 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா கலாசாரத்தை ஒடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என்று வெங்கடேசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவையில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இறப்பும் 500-ஐ நெருங்கிவிட்டது. இது மிகவும் ஆபத்தாகும். இந்த இறப்பில் பெரும்பாலும் சர்க்கரைநோய் உள்ளிட்ட நோய் பாதித்தவர்கள் என்று கூறினாலும் 18, 30 வயது கொண்டவர்கள் கூட நோய் அறிகுறி இன்றி திடீரென இறப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இனிவரும் காலங்களில் மக்கள் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். அரசு அறிவுரைகளான முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்து இருப்பது, தேவையின்றி வெளியில் நடமாடுவது, குழந்தைகளை வெளியே அழைத்து வருதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தொற்று பாதித்தவர்கள் வெளியே சுற்றுவது தெரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்பது அரசின் நல்ல முயற்சியாகும்.

வாரம் 2 நாள் ஊரடங்கு

புதுச்சேரியில் தற்போது மக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மார்க்கெட் பகுதிகளில் அதிக கூட்டம் கூடுவது பயமாக இருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் வாரம் 2 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும்.

புதுச்சேரியில் சராசரியாக தினமும் 500 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. அதில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் வீடுகளில் இருப்பதில்லை. அதனால் தொற்று வேகமாக பரவுகிறது. இந்தநிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் நமக்கு இப்போது உதவவில்லை என்றால் வேறு எப்போது உதவுவார்கள்? எனவே நம் மக்கள் நலம்தான் முக்கியம் என கருதி மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புறக்காவல் நிலையம்

புதுவையில் சட்டம்- ஒழுங்கு நிலைமை சற்று கவலை அளிப்பதாக உள்ளது. சமீபத்தில் அரசு அதிகாரியும், அரசியல் பிரமுகருமான ஒருவர் நகரின் மைய பகுதியில் படுகொலை செய்யப்படுகிறார். பல இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதுபோன்ற போதை பொருட்களை உட்கொண்ட பிறகுதான் படுகொலைகள் உள்ளிட்ட குற்ற செயல்கள் அரங்கேறுகிறது. எனவே காவல்துறை அதிகாரிகளை அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யவேண்டும். அப்போதுதான் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும்.

போலீசாரின் ரோந்து பணியையும் அதிகரிக்க வேண்டும். குற்றம் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து புறக்காவல் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும். தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியிலும் கண்டிப்பாக ஒரு காவல்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கஞ்சா கலாசாரத்தை ஒடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்கப்பட வேண்டும்.

இவ்வாறு வெங்கடேசன் எம்.எல்.ஏ. பேசினார்.

Next Story