பெரம்பலூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் - அலுவலகங்கள் வெறிச்சோடின
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
பெரம்பலூர்,
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மாநிலம் முழுவதும் ஒருநாள் தற்செயல் விடுப்புப் போராட்டம் நேற்று நடந்தது. தமிழக அரசு சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களையும் சித்திக் ஐ.ஏ.எஸ். குழுவின் பரிந்துரைப்படி அரசாணை வெளியிட வேண்டும்.
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின்போது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்ரமணியனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையை சேர்ந்த 109 ஊராட்சி செயலாளர்கள், 106 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், சுகாதாரத்துறையை சேர்ந்த 10 சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 225 ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பெரம்பலூர் வேப்பந்தட்டை, வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.
Related Tags :
Next Story