திருமானூரில் பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; தாத்தா- பேத்தி சாவு


திருமானூரில் பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; தாத்தா- பேத்தி சாவு
x
தினத்தந்தி 23 Sep 2020 9:15 AM GMT (Updated: 2020-09-23T14:28:04+05:30)

திருமானூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தாத்தா- பேத்தி பரிதாபமாக இறந்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 50). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று மாலை தனது மருமகள் காயத்ரி(24) மற்றும் பேத்திகள் சுபஸ்ரீ (3), குணஸ்ரீ (5) ஆகியோரை தனது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருமானூர் நோக்கி சென்றார்.

திருமானூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள வளைவில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சேகர் மற்றும் சுபஸ்ரீக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருவையாறில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை சுபஸ்ரீயும் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தாத்தா- பேத்தி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story