கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 4 பேர் கைது


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2020 9:47 PM IST (Updated: 23 Sept 2020 9:47 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதிஉதவி திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து வேளாண்மைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கென மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுவினர் 1.4.2020-ல் தொடங்கி இத்திட்டத்தில் எவ்வளவு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர், அதில் எத்தனை பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்று ஆய்வு செய்தனர்.

இதில் விவசாயிகள் அல்லாதவர்கள் 2 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்டு நிதி உதவி பெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் உதவி இயக்குனர்கள் 2 பேர் மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்கள் 18 பேர் ஆக மொத்தம் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் போலி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையை வங்கிகள் மூலம் திரும்ப பெறும் நடவடிக்கையில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள், இடைத்தரகர்கள் யார், யார்? என கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஏற்கனவே இந்த முறைகேடு தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த முறைகேட்டில் அட்மா திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்களான உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் பகுதியை சேர்ந்த பயிர் அறுவடை பரிசோதகர்கள் மாரிமுத்து (29), கலைச்செல்வன் (27), மணிகண்டன் (26) மற்றும் தனியார் பயிர் காப்பீட்டு நிறுவன முகவர் சிலம்பரசன் (32) ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மடக்கிப்பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மாரிமுத்து உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து திருநாவலூர் வட்டாரத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் 1,500 பேரை இத்திட்டத்தில் முறைகேடாக சேர்த்து பணம் பெற்றிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாரிமுத்து உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story