கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2020 4:30 AM IST (Updated: 24 Sept 2020 12:25 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கொரோனா காலத்தில் சம்பளம் குறைப்பு, ஆள் குறைப்பு போன்ற நடவடிக்கை மேற்கொள்ள கூடாது. தொழிலாளர்கள் மீதான தாக்குதலை கைவிட வேண்டும். முறைசாரா நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். ஏழை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் சி.பொன்ராஜ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் க.தமிழரசன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் எம்.மோகன்தாஸ், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணவேணி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.ராஜசேகரன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் கேசவன், தொழிலாளர் முன்னேற்ற கழக நகர செயலாளர் பரமசிவம், தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் தெய்வேந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த உத்தண்டுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆறுமுகநேரி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் செயல்பட்டுவரும் தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய-மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆறுமுகநேரி பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. செயலாளர் முருகன், துணை செயலாளர் எஸ்.கே.முருகன், ஏ.ஐ.டி.யு.சி. கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பன்னீர்செல்வம், சங்கரேஸ்வரன், மாரிமுத்து உள்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஜோதி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. தாலுகா செயலாளர் குணசீலன், எல்.பி.எப். செயலாளர் சுப்பையா, ஏ.ஐ.ஐ.சி.டி.யு. சண்முக பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வக்கீல் ஜோதிராஜா தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story