ஜெயங்கொண்டம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு


ஜெயங்கொண்டம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 23 Sep 2020 11:12 PM GMT (Updated: 2020-09-24T04:42:44+05:30)

ஜெயங்கொண்டம் அருகே கரடிக்குளம் பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன். இவரது மனைவி ராசாத்தி. இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் தர்மா என்ற தர்மதுரை என்பவருக்கும் இடபிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ராசாத்தி ஜெயங்கொண்டம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கரடிகுளம் பஸ் நிறுத்தம் எதிரே டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் டீக் கடைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்ததாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ராசாத்தி புகார் செய்தார்.

ஆனால் ஜெயங்கொண்டம் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதை கண்டித்து ராசாத்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெயங்கொண்டம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கட்டைகளை சாலையில் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக ராசாத்தி உள்ளிட்ட 5 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story