வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை-ரூ.3½ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை-ரூ.3½ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Sept 2020 4:46 AM IST (Updated: 24 Sept 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் அருகே வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கோடங்குடி கிராமத்தில் எலக்ட்ரிக்கல் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். ராஜ்குமாருக்கு உடல் நிலை சரியில்லாததால், தனது வீட்டை பூட்டிவிட்டு கடந்த 10 நாட்களாக அதே கிராமத்தில் உள்ள அவரது தந்தை ராமதாஸ் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.

நேற்று காலை ராஜ்குமாரின் மனைவி ராஜேஸ்வரி, ஒரு சில பொருட்கள் எடுப்பதற்காக தனது வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, தனது மாமனார் ராமதாஸ் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து அழைத்துள்ளார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன.

30 பவுன் நகை கொள்ளை

பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அரியலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் மீனா, சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. விரல்ரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, முக்கிய தடங்களை சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story