டெங்கு, மலேரியாவை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க தவறினால் சிறை தண்டனை - பொதுமக்களுக்கு கலெக்டர் அருண் எச்சரிக்கை


டெங்கு, மலேரியாவை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க தவறினால் சிறை தண்டனை - பொதுமக்களுக்கு கலெக்டர் அருண் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Sep 2020 12:03 AM GMT (Updated: 24 Sep 2020 12:03 AM GMT)

டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க தவறினால் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு புதுவை கலெக்டர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் தற்போது பருவமழை தொடங்க உள்ள நிலையில் கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா, மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கொசுக்கள் உற்பத்தியாகும் இடத்தை கண்டறிந்து அவற்றை அழித்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரும், சுகாதாரத்துறை செயலாளருமான அருண் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, தேசிய பூச்சி கட்டுப்பாட்டு துறை இயக்குனர் அஸ்வனி குமார், மலேரியா உதவி இயக்குனர் கணேசன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொசுக்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன்பின் மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள ஒருசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உயிர்க்கொல்லி டெங்குவை பரப்பும் கொசுக்கள், தேனீர் குடுவைகள், உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், பானைகள், ஆட்டு உரல்கள், பூச்சாடிகள், குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறம் தேங்கியுள்ள தண்ணீர், தேங்காய் மட்டைகள் மற்றும் இளநீர் குடுவைகளில் தான் இனப்பெருக்கம் செய்கிறது. எனவே இவற்றை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேல்நிலை தொட்டி, கீழ்நிலை தொட்டி, கிணறு, பெரிய சிமெண்டு மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகள், மொட்டை மாடியில் தேங்கி நிற்கும் மழைநீர் ஆகியவற்றில் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆகையால் மேல்நிலைத் தொட்டி மற்றும் கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் கொசுக்கள் புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். கிணறுகளை வலை கொண்டு மூட வேண்டும். கம்பூசியா மற்றும் கப்பீஸ் போன்ற மீன்களை விடுவதால் மலேரியா கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.

குப்பைகளை சாக்கடை மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களில் போடுவதன் மூலம் யானைக்கால் நோய் பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன. எனவே குப்பைகளை வாய்க்காலில் கொட்டாமல் இருப்பதன் மூலம் இதை தடுக்க முடியும். புதுவை மாநிலத்தில் மலேரியா, டெங்கு மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோய் பரப்பும் கொசு உற்பத்தியாகும் இடங்களை தடுக்க தவறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

தற்போது புதுவையில் கொரோனா அதிகம் பாதித்துள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் இணையதளம் மூலமாக உணவுப் பொருட்களை வரவழைத்து சாப்பிடுகிறார்கள். பின்னர் காலியான பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய கப்புகளை வீட்டுக்கு அருகில் வீசி எறிகிறார்கள். அவற்றில் தேங்கும் மழைநீரில் டெங்கு கொசு உருவாகிறது. இதன் மூலம் டெங்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பொருட்களை குப்பை தொட்டியில் போட்டு டெங்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.

மழைக்காலத்தில் கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் சுகாதாரத்துறையுடன் இணைந்து ஒத்துழைப்பு தருவதால் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா, யானைக்கால் நோய் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் இல்லாத புதுவையை உருவாக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story