கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபர் வெட்டிக்கொலை


கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 24 Sept 2020 6:05 AM IST (Updated: 24 Sept 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

பட்டப்பகலில் போட்டோ ஸ்டூடியோவுக்குள் புகுந்து கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் வீரராகவர் சாமி நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 36). இவர், காக்களூர்-புட்லூர் சாலையில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். மேலும் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யும் தொழிலையும் செய்து வந்தார்.

இவருக்கு அனிதா (31) என்ற மனைவியும், சமிக்‌ஷா மெர்லின் (8) என்ற மகளும் உள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள், 10 ஆண்டுகள் முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

நேற்று மதியம் தினேஷ் கடையில் இருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து தினேசை தலை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் மற்றும் பட்டாகத்தியால் சரமாரியாக வெட்டினர்.

அதன் பின்னர், 3 பட்டா கத்திகளையும் கடைக்கு உள்ளேயே வீசிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமார், ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கள்ளக்காதல் விவகாரத்தில் தினேஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story