கொரடாச்சேரி அருகே, பின்தங்கிய கிராமங்களில் ஆதிதிராவிட மக்களின் கல்வி நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு


கொரடாச்சேரி அருகே, பின்தங்கிய கிராமங்களில் ஆதிதிராவிட மக்களின் கல்வி நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 24 Sept 2020 8:21 AM IST (Updated: 24 Sept 2020 8:21 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே பின்தங்கிய கிராமங்களில் ஆதிதிராவிட மக்களின் கல்வி நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கொரடாச்சேரி,

மத்திய அரசின் கிராம முன்னோடி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் ஆதிதிராவிட மக்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. அப்போது கொரடாச்சேரி ஒன்றியம் கமுதக்குடி, அம்மையப்பன், மேலராதாநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்களது குழந்தைகளின் கல்வி திறன் மற்றும் கல்வித்தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி எல்.கே.ஜி. வகுப்புகளில் சேர்ந்துள்ள குழந்தைகள், தேசிய வருவாய் வழி தேர்வு மற்றும் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் விவரம், கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் பார்வையிட்ட விவரம் மற்றும் கல்வி சார்ந்த தேவைகள், மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்வி பயில்வதற்கு உள்ள தடைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

20 ஊராட்சிகள் தேர்வு

அப்போது தொடர் கல்வி பெற முடியாமல் இருந்த கமுகக்குடி ஊராட்சியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதேபோல் கமுகக்குடி ஊராட்சியில் 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்பு சேராமல் இருந்த மாணவன் ஒருவரும் இந்த குழுவினரால் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆய்வின் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், ஆனந்தன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரபு, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் காத்தமுத்து, கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் 20 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.

Next Story