தஞ்சை அரண்மனை வளாகத்தில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை கலெக்டர் தொடங்கி வைத்தார்


தஞ்சை அரண்மனை வளாகத்தில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Sep 2020 3:21 AM GMT (Updated: 24 Sep 2020 3:21 AM GMT)

தஞ்சை அரண்மனை வளாகத்தில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனையை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மகாலில் தஞ்சை கைவினை தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசை தொழிற்சங்கத்தின் சார்பில் நவராத்திரி கொலு விற்பனை நேற்று தொடங்கியது. இந்த கொலு விற்பனை அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விற்பனை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தஞ்சை கைவினை தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசை தொழிற்சங்கம் 1958-ல் தொடங்கப்பட்டு கடந்த 62 வருடங்களாக தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மஹால் மாடியில் இயங்கி வருகிறது. இந்த கொலு விற்பனையில் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், மதுரை, காஞ்சிபுரம் போன்ற பல ஊர்களில் இருக்கும் கைவினை கலைஞர்களிடம் இருந்து பல வண்ண மிகு பொம்மைகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

10 சதவீதம் தள்ளுபடி

அஷ்டலட்சுமி, கள்ளழகர், தசாவதாரம், விவசாயம், நரகாசுரன் வதம், கருட சேவை, சோட்டா பீம், ராமானுஜர் குருகுலம், தேசிகர், 12 ஆழ்வார்கள், 18-சித்தர்கள், அத்தி வரதர் தரிசனம், கொல்கத்தா பொம்மைகள் போன்றவைகளும் மற்றும் தரமான கைவினைப் பொருட்களும் குறைந்த விலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மண் பொம்மைகள் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன், தொழில் கூட்டுறவு பிரிவு உதவி இயக்குனர் விஜயகுமார், தஞ்சை கைவினை தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு குடிசை தொழிற்சங்க தலைவர் சாம்பாஜி ராஜா போன்ஸ்லே, செயலாளர் மீனா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story